தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

தமிழ் பழமொழிகள்/Tamil Pazhamozhigal

1. பழமொழி/Pazhamozhi
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்/Tamil Meaning
உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

Transliteration
Uppittavarai ullalavum ninai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."

2. பழமொழி/Pazhamozhi
எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

பொருள்/Tamil Meaning
அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.

Transliteration
Etuppar maluvai, tatuppar puliyai, kotuppar arumai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.

3. பழமொழி/Pazhamozhi
வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

பொருள்/Tamil Meaning
 என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

Transliteration
Vaitthaal pillaiyar, valittu erintal chaani.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம்.
கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.
பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?
கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.

4. பழமொழி/Pazhamozhi
எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.

பொருள்/Tamil Meaning
திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.

Transliteration
Enke tirutinalum kannakkol vaikka oru itam ventum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.

5. பழமொழி/Pazhamozhi
சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?

பொருள்/Tamil Meaning
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.

Transliteration
Chidamparattil pirantha pillaikkut tiruvenpaavaik karrukkotukka ventuma?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?.

6. பழமொழி/Pazhamozhi
 கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

பொருள்/Tamil Meaning
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

Transliteration
Kampan veettuk kattut tariyum kavipatum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.

7. பழமொழி/Pazhamozhi
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

பொருள்/Tamil Meaning
தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.

Transliteration
anti makan antiyanal, neram arintu canku uthuvaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.

8. பழமொழி/Pazhamozhi
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

பொருள்/Tamil Meaning
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.

Transliteration
Cumma kitantha cankai utik ketuttan aanti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.

9. பழமொழி/Pazhamozhi
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?

பொருள்/Tamil Meaning
மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.

Transliteration
Vantatai varappatuttata valakkaattu ramaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.

10. பழமொழி/Pazhamozhi
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

பொருள்/Tamil Meaning
ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.

Transliteration
Kalutaikkup paratecam kutticcuvar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.

11. பழமொழி/Pazhamozhi
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?

பொருள்/Tamil Meaning
சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?

Transliteration
sorril kitakkira kallai etukkamaattathavan nganatthai eppati arivan?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி. 

12. பழமொழி/Pazhamozhi
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

பொருள்/Tamil Meaning
உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

Transliteration
Ullooril onaan pitikkathavan, utaiyaarpalaiyam poi utumpu pitippanaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.

13. பழமொழி/Pazhamozhi
ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.

பொருள்/Tamil Meaning
ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

Transliteration
aanaiyai (allatu malaiyai) mulunkina ammaiyarukkup poonai suntaanki.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?

14. பழமொழி/Pazhamozhi
கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.

பொருள்/Tamil Meaning
ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.

Transliteration
Kottik kotti alanthalum kuruni pathakku aakathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.

15. பழமொழி/Pazhamozhi
ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.

பொருள்/Tamil Meaning
பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.

Transliteration
Ontikkaran pilaippum vantikkaran pilaippum onru.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.

16. பழமொழி/Pazhamozhi
எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?

பொருள்/Tamil Meaning

Transliteration
Elluthan ennaikkuk kaaykiratu. Elip pulukkai ennattukku kaaykiratu?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

17. பழமொழி/Pazhamozhi
உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.

பொருள்/Tamil Meaning
பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)?

Transliteration
Ulai (allatu ceru) valiyum, atai malaiyum, pothi eruthum taniyumaay alaikirathupol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 இந்தப் பழமொழியின் கவிதை தீட்டும் ஓவியம் ஓர் ஆற்புதம்! ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?

18. பழமொழி/Pazhamozhi
உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.

பொருள்/Tamil Meaning
வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும்.

Transliteration
Unpaan tinpaan pairaki, kutthukku nirpaan veeramushti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது.

19. பழமொழி/Pazhamozhi
கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

பொருள்/Tamil Meaning
ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.

Transliteration
Kala mavu ititthaval pavi, kppi ititthaval punniyavathiyaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது! வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான்.

20. பழமொழி/Pazhamozhi
ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.

பொருள்/Tamil Meaning
இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!

Transliteration
Oru kuruvi irai etukka, onpatu kuruvi vaai tirakka.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.

21. பழமொழி/Pazhamozhi
இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.

பொருள்/Tamil Meaning
நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.

Transliteration
Ititthaval putaitthaval inke irukka, ettip parttaval kottikkontu ponal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

22. பழமொழி/Pazhamozhi
இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

பொருள்/Tamil Meaning
கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது

Transliteration
Ittavarkal, tottavarkal kettavarkal, ippotu vantavarkal nallavarkal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

23. பழமொழி/Pazhamozhi
அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.

பொருள்/Tamil Meaning
அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா?

Transliteration
Appasuvamikkuk kalyanam, avaravar veettil sappadu, kottumelam kovilile, verrilai paakku kataiyile, cunnampu soolaiyile.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது!

24. பழமொழி/Pazhamozhi
பட்டும் பாழ், நட்டும் சாவி.

பொருள்/Tamil Meaning
நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.

Transliteration
Pattum paal, nttum savi.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது ஒரு மிக அழகான பழமொழி. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ல கதிர்களுக்குச் சாவி என்ற பெயர் எத்தனை வளமானது! chaff என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம். சாவி என்றால் வண்டியின் அச்சாணி என்று இன்னொரு பொருள் உண்டு.அதுபோலப் பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்!

25. பழமொழி/Pazhamozhi
கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.

பொருள்/Tamil Meaning
 ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

Transliteration
Kotukkiratu ulakkuppal, uthaikkiratu palluppoka.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

26. பழமொழி/Pazhamozhi
ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?

பொருள்/Tamil Meaning
ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?

Transliteration
Orunal kootthukku miicai seraikkavaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

27. பழமொழி/Pazhamozhi
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

பொருள்/Tamil Meaning
இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?

Transliteration
Intak koolukkaa irupattettu namam!

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப் பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

28. பழமொழி/Pazhamozhi
கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

பொருள்/Tamil Meaning
கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.

Transliteration
Kai kaaytthaal kamuku (paakku) kaykkum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

29. பழமொழி/Pazhamozhi
கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?

பொருள்/Tamil Meaning
ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா?

Transliteration
Kolukkattai tinra naykkuk kuruni mor guru tashanaiyaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

30. பழமொழி/Pazhamozhi
சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

பொருள்/Tamil Meaning
வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்!

Transliteration
sakira varaiyil vaittiyan vidaan, setthalum vidaan panchaankakkaran.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.

31. பழமொழி/Pazhamozhi
காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.

பொருள்/Tamil Meaning
நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

Transliteration
kaalaich currina pampu katikkamal vitaathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
விடக்கண்டானிடாம் கொடாக்கண்டனாக இருப்பது கடினம்!

32. பழமொழி/Pazhamozhi
ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.

பொருள்/Tamil Meaning
அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது.

Transliteration
Oru ati atittalum pattukkollalam, oru sol ketka mutiyatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பட்டுக்கொள்ளலாம் என்ற பிரயோகம் இனிமை. அடி வாங்குதல் இன்று வழக்கில் இருந்தாலும், பணிந்து அடி பட்டுக்கொள்ளுதல் என்பதே சரியாகத் தொன்றுகிறது. வாங்குவதைத் திருப்பிக் கொடுக்க முடியுமோ? அல்லது பெற்றுக் கொள்வது அடி என்றால் அது ஒரு யாசகம் ஆகாதோ?

33. பழமொழி/Pazhamozhi
உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.

பொருள்/Tamil Meaning
சுற்றமும் நட்பும் தாங்கமுடியாத தொல்லைகள் ஆகும்போது பாதிக்கப்பட்டவன் சொன்னது: உங்கள் உறவைவிட மரண்மே மேல்!

Transliteration
Unkal uravile vekirathaivita, orukattu virakile vekiratu mel.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பது கருத்து.

34. பழமொழி/Pazhamozhi
தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?

பொருள்/Tamil Meaning
ஒழுக்கம் விழுப்பம் தந்தாலும் அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது.

Transliteration
Taanaakak kaniyaathathu, tadikontu atitthal kaniyumaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
முன்னுள்ள பழமொழிக்கு இந்தப் பழமொழியே முரணாகத் தோன்றுகிறதே? ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. இயற்கையில் ஒழுங்கு இருந்தால் கண்டிப்பால் அது சிறக்கும்.

35. பழமொழி/Pazhamozhi
கோல் ஆட, குரங்கு ஆடும்.

பொருள்/Tamil Meaning
எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

Transliteration
Kol aata, kuranku aadum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும்.

36. பழமொழி/Pazhamozhi
கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?

பொருள்/Tamil Meaning
நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

Transliteration
Kadaiyacche varatha venneyi, kutaiyacche varappokirato?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

37. பழமொழி/Pazhamozhi
மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.

பொருள்/Tamil Meaning
எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

Transliteration
Meytthaal kaluthai meyppen, illaatheponal paratecam poven.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

38. பழமொழி/Pazhamozhi
ஒற்றைக் காலில் நிற்கிறான்.

பொருள்/Tamil Meaning
விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

Transliteration
Orraik kaalil nirkiran.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

39. பழமொழி/Pazhamozhi
ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?

பொருள்/Tamil Meaning
நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா?

Transliteration
Onru onray nooraa? Orumikka nooraa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள். 

40. பழமொழி/Pazhamozhi
முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?

பொருள்/Tamil Meaning
தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?

Transliteration
Muti vaittha talaikkuch sulik kurram paarkkiratha?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.

41. பழமொழி/Pazhamozhi
நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது).

பொருள்/Tamil Meaning
நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை.

Transliteration
Nilal nallatutan musuru kettatu (allatu pollatathu).

தமிழ் விளக்கம்/Tamil Explanation
முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்!

42. பழமொழி/Pazhamozhi
புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.

பொருள்/Tamil Meaning
இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல.

Transliteration
Punniyatthukku ulutha kundaaiyai pallaip pitittup padham parttatupola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அன்பாக உதவியவர்களிகளின் உதவியில் குற்றம் கண்டுபிடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

43. பழமொழி/Pazhamozhi
குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.

பொருள்/Tamil Meaning
குதிரை பார்க்க நலமுடன் இருக்கிறது, ஆனால் அதன் சுழி சரியில்லை.

Transliteration
Kutirai nallatutan, suli kettatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.

44. பழமொழி/Pazhamozhi
எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?

பொருள்/Tamil Meaning
சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலைகளை எண்ணினானாம்.

Transliteration
Eccil (ilai) etukkach sonnaarkala? Ettanai per enru ennach connaarkala?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
தன் வேலைக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம்கொண்டு நேரத்தை விரயம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது.

45. பழமொழி/Pazhamozhi
ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.

பொருள்/Tamil Meaning
ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!

Transliteration
uci kollappoyth tulaak kanakku parttatupola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அற்ப விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது.

46. பழமொழி/Pazhamozhi
ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.

பொருள்/Tamil Meaning
வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.

Transliteration
ira venkaayatthirku irupattu nalu purai etukkiratu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது.

47. பழமொழி/Pazhamozhi
இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

பொருள்/Tamil Meaning
நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

Transliteration
Intap pooraayatthukku onrum kuraiccalillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது.

48. பழமொழி/Pazhamozhi
இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்.

பொருள்/Tamil Meaning
 இது புழு அரித்துச் சொத்தையாக உள்ளது, அதுவோ புளியங்காய் போலப் புளிப்பாக உள்ளது என்று நிராகரித்தது.

Transliteration
Idhu sotthai, athu puliyankaayppol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது.

49. பழமொழி/Pazhamozhi
ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.

பொருள்/Tamil Meaning
 யாரோ யாரையோ ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இந்த உழவன் கலப்பையைக் கீழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம்.

Transliteration
Rettiyaare rettiyaare enral, kalappaiyai paliccenru pottatupol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ரெட்டியார் என்றது தெலுங்கு தேச உழவர்களை. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். சிரத்தை இல்லாமல் சோம்பேறியாக வேலையில் இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

50. பழமொழி/Pazhamozhi
பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

பொருள்/Tamil Meaning
இந்தப் பணத்தை எண்ணிச் சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் பணத்தைத் திருப்பித்தற இயலாது என்றானாம்.

Transliteration
Parkkakkotuttha panattukku vellikkilamaiyaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது.

51. பழமொழி/Pazhamozhi
சட்டி சுட்டதும், கை விட்டதும்.

பொருள்/Tamil Meaning
ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.

Transliteration
Catti cuttatum, kai vittatum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.

52. பழமொழி/Pazhamozhi
கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.

பொருள்/Tamil Meaning
சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான்.

Transliteration
Kerati karravan itarivilunthal, atuvum oru varicai enpaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கரடி என்ற சொல்லின் திரிபு கெரடி. கரடி என்றால் சிலம்பம் என்று ஒரு பொருள் உண்டு. வரிசை என்றால் முறை, ஒழுங்கு, வகை என்று பொருள். வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்துச் சொன்னது.

53. பழமொழி/Pazhamozhi
மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?

பொருள்/Tamil Meaning
மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?

Transliteration
Malaikkala iruttaanalum, manthi kompu ilantu payumaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.

54. பழமொழி/Pazhamozhi
நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.

பொருள்/Tamil Meaning
தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.

Transliteration
Neentathu tacchan, kuraintathu karuman.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி.

55. பழமொழி/Pazhamozhi
தண்ணீரில் அடிபிடிக்கிறது.

பொருள்/Tamil Meaning
தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

Transliteration
Tanneeril atipitikkirathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது. 

56. பழமொழி/Pazhamozhi
இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.

பொருள்/Tamil Meaning
ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல.

Transliteration
Iraja mukattukku elumicchampalam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது செய்தி. 

57. பழமொழி/Pazhamozhi
ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.

பொருள்/Tamil Meaning
சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு.

Transliteration
aanaal accile vaar, aakavittal mitaavile vaar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பொற்கொல்லன் தங்கத்தை உருக்கிப் பரிசோதிக்கும்போது மாசற்று இருந்தால் நகை செய்யும் அச்சில் கொட்டுவான். மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். ஏதோ ஒரு வழியில் காரியத்தை முடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

58. பழமொழி/Pazhamozhi
உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.

பொருள்/Tamil Meaning
கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை (அங்கதமாகச் சொன்னது).

Transliteration
Ulutthan viruntukku oppanathu onrumillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள்

59. பழமொழி/Pazhamozhi
வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.

பொருள்/Tamil Meaning
ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும்.

Transliteration
vauvaal veettukku vauvaal vanthal, neeyum tonku nanum tonku.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.

60. பழமொழி/Pazhamozhi
பசி வந்தால் பத்தும் பறக்கும்.

பொருள்/Tamil Meaning
பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

Transliteration
Paci vanthal patthum parakkum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி. (வேறு விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம்).

61. பழமொழி/Pazhamozhi
கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.

பொருள்/Tamil Meaning
வறுமையானாலும் வெட்கப்படாமல் தன்னிலையில் மானமரியாதையுடன் இருக்கவேண்டும்.

Transliteration
Kool kutittalum kuttaayk kutikkaventum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. ’கூழாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்ற பழமொழியும் இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் அறிவுறுத்துகிறது.

62. பழமொழி/Pazhamozhi
பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.

பொருள்/Tamil Meaning
கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு.

Transliteration
Pallakkukku melmooti yillatavanukkum, kaalukkuch ceruppillaathavanukkum visaram onre.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பணக்காரன் துணியைப் போர்த்தி பல்லக்கை மூடிக்கொள்ளலாம்; செருப்பில்லாத ஏழை என்ன செய்ய முடியும்? அதாவது, பணக்காரன் தன் மெய்வருத்தம் சரிசெய்துகொள்ளலாம். ஏழைக்கு அது முடியாது.

63. பழமொழி/Pazhamozhi
வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.

பொருள்/Tamil Meaning
வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல.

Transliteration
Veetu verum veetu, velur atikaram.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது.

64. பழமொழி/Pazhamozhi
மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.

பொருள்/Tamil Meaning
மடத்தின் பெருமை பெரியதுதான், ஆனாலும் அங்கு சோறு-தண்ணீர் கிடைக்காது.

Transliteration
Matap perumaithan neecchu tanneerukku valiyillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
நீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. அது நீராகாரத்தைக் குறிக்கும். ’தோப்பு துரவு, நிலம் நீச்சு’ என்று சொல்கிறோம். இங்கு துரவு என்பது மணற்கேணியையும் நீச்சு என்பது நீர் நிறைந்த நெல்வயல்களையும் குறிக்கும்.

65. பழமொழி/Pazhamozhi
ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி

பொருள்/Tamil Meaning
 குள்ளப் பண்டாரத்தின் விபூதிப்பட்டை/தாடி அவர் உயரத்தைவிட அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது!

Transliteration
Jaan pantaaratthukku mulam vipooti/thaati

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 தன் நிலைக்குத் தகாத மரியாதையைகளை எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது.

66. பழமொழி/Pazhamozhi
எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.

பொருள்/Tamil Meaning
என் கணவனும் நீதி மன்றத்தில் வேலை செய்கிறார்.

Transliteration
Enkal atthukkaaranum kaccerikkuppoi vantan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இவள் கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். அதைப் பட்டும் பாடாமலும் இவள் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள். இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. [கச்சேரி என்ற சொல்லுக்குத் தமிழில் உத்தியோக சாலை என்று பொருள், அது எந்த உத்தியோகாமானாலும்.]

67. பழமொழி/Pazhamozhi
சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.

பொருள்/Tamil Meaning
இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

Transliteration
sangkile vittal tirttham, mondhaiyile vittal tannir.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு

68. பழமொழி/Pazhamozhi
ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?

பொருள்/Tamil Meaning
ஆண்டி ஒருவனுக்கு உணவிடும்போது அது அவனுக்காகவா? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா?

Transliteration
aantikkuk kotukkiraayo, suraik kutukkaikkuk kotukkiraayo?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கொடுப்பதைப் புகழ்ச்சியை எதிர்பாராமல் கொடுக்கவேண்டும் என்பது செய்தி. உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.

69. பழமொழி/Pazhamozhi
பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.

பொருள்/Tamil Meaning
பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.

Transliteration
Porimavai meccinan pokkaivaayan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.

70. பழமொழி/Pazhamozhi
துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!

பொருள்/Tamil Meaning
குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.

Transliteration
Thullathe Thullathe kullaa! Pakkattil pallamadaa !

தமிழ் விளக்கம்/Tamil Explanation
எப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி.

71. பழமொழி/Pazhamozhi
ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.

பொருள்/Tamil Meaning
தற்புகழ்ச்சியின் உச்சி இது.

Transliteration
aakaasattai vatuppataamal katippen enkiran.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதுபோன்ற பிற பழமொழிகள்: ’வானத்தை வில்லாக வளைப்பேன்’, ’மணலைக் கயிறாகத் திரிப்பேன்’.

72. பழமொழி/Pazhamozhi
வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.

பொருள்/Tamil Meaning
வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

Transliteration
Valaippalam kontuponaval vacalil iruntal, vaayaik kontuponaval natuveettil iruntal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
முகஸ்துதிக்கு மயங்காதவர் உண்டோ?

73. பழமொழி/Pazhamozhi
உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.

பொருள்/Tamil Meaning
 உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும். 

Transliteration
Urrar thinraal purray vilaiyum, oorar thinraal paeraaai vilaiyum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 அன்னதானத்தின் சிறப்பைப் பற்றிச் சொன்னது.

74. பழமொழி/Pazhamozhi
அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.

பொருள்/Tamil Meaning
ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

Transliteration
Ampaatthoor velanmai yanai kattath thal, vanamuttum por; aarukontathu paathi, thoorukontathu paathi.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பொய் சொன்னது ஏன்? இதுதான் கதை: (வெள்ளையர் ஆட்சியில்?) அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். அதிகாரி மகிழ்ந்து பழமொழியின் இரண்டாவது பாதியைச் சொல்லி அதையே தான் குறித்துக்கொள்வதாகக் கூறினார். அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று.

75. பழமொழி/Pazhamozhi
பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.

பொருள்/Tamil Meaning
வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

Transliteration
Pangaalatthu nay singkaasanammel erinatu enru vannaan kalutai vellavip paanaiyil aerinathaam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வங்காளத்தை ஆண்டவர்கள் நாய் வளர்த்தனர் போலும். தனக்கு ஆகாததைச் செய்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது செய்தி.

76. பழமொழி/Pazhamozhi
எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.

பொருள்/Tamil Meaning
எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

Transliteration
Ettanai vitthai karralum cetthavanaip pilaippikka ariyaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களைக் குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர்.

77. பழமொழி/Pazhamozhi
அப்பியாசம் கூசா வித்தை.

பொருள்/Tamil Meaning
அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும். 

Transliteration
Appiyacam koosaa vitthai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா? தெரிந்தவர் விளக்கலாம். ’அப்பியாசம் குல விருது’ என்பது இன்னொரு பழமொழி.

78. பழமொழி/Pazhamozhi
புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.

பொருள்/Tamil Meaning
வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது.

Transliteration
Putiya vannaanum palaiya ampattanum tetu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஏன் இப்படி? வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும். நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும்.

79. பழமொழி/Pazhamozhi
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.

பொருள்/Tamil Meaning
கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

Transliteration
Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.

80. பழமொழி/Pazhamozhi
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.

பொருள்/Tamil Meaning
நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

Transliteration
Tottuk kaattatha vitthai cuttup pottalum varaatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது.

81. பழமொழி/Pazhamozhi
இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.

பொருள்/Tamil Meaning
ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

Transliteration
Idaisan pillaikkaarikkuth talaiccan pillaikkaari maruttuvam paarttharpola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இடைச்சன்=இரண்டாம் பிள்ளை, தலைச்சன்=முதல் பிள்ளை.

82. பழமொழி/Pazhamozhi
இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?

பொருள்/Tamil Meaning
இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை?

Transliteration
Ittanai atthanaiyanal attanai etthanaiyakum?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல ஜீவாத்மாக்கள். இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

83. பழமொழி/Pazhamozhi
வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.

பொருள்/Tamil Meaning
ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

Transliteration
Vaittiyan pillai novu theeratu, vaatthiyar pillaikkup patippu varaatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஏன் இவ்விதம்? வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால்.

84. பழமொழி/Pazhamozhi
கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.

பொருள்/Tamil Meaning
ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.

Transliteration
Karumpai virumpa virumpa vempu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

85. பழமொழி/Pazhamozhi
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

பொருள்/Tamil Meaning
ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

Transliteration
Eeraip penaakkip penaip perumal akkukiran.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஈர் என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் பேனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. அந்தப் பேனையும் பெரிதாக்கினாள் (உதாரணமாக ஒரு நுண்நோக்கியால் பார்த்தால்) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ? வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம்.

86. பழமொழி/Pazhamozhi
ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?

பொருள்/Tamil Meaning
கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).

Transliteration
Orukootai kallum teyvamanal kumpitukirathu entak kallai?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.

87. பழமொழி/Pazhamozhi
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?

பொருள்/Tamil Meaning
ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.

Transliteration
oorukku ilaittavan pillaiyar kovil aanti?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தங்கியிருக்கும் ஆண்டி கவனிக்கப்படுவானா?

88. பழமொழி/Pazhamozhi
வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.

பொருள்/Tamil Meaning
எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.

Transliteration
Vaatthiyaarai mecchina pillai illai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.

89. பழமொழி/Pazhamozhi
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.

பொருள்/Tamil Meaning
அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

Transliteration
Atikari veettuk kolimuttai kutiyanavan veettu ammiyai udaitthathaam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. ஒரு அதிகாரியின் வேலையாட்கள் தம் யஜமானரின் அதிகாரம் தமக்கே உள்ளதுபோலக் காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது.

90. பழமொழி/Pazhamozhi
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.

பொருள்/Tamil Meaning
அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

Transliteration
Annamalaiyarukku arupatthunalu poocai, aantikalukku elupatthunalu poocai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது.

91. பழமொழி/Pazhamozhi
ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.

பொருள்/Tamil Meaning
 ஊர் மக்களின் அந்தரங்க அவலங்கள் எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும்.

Transliteration
oor ilakkaram vannaanukkuth teriyum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்!

92. பழமொழி/Pazhamozhi
தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.

பொருள்/Tamil Meaning
தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.

Transliteration
Telukkum maniyam kotutthaal jaama jaamatthukkuk kottum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர். மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும்.

93. பழமொழி/Pazhamozhi
1.சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி.
2.சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.
3.வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.

பொருள்/Tamil Meaning
மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

Transliteration
1.saalaaiy vaitthalum sari, sattiyaaiy vaitthalum sari.
2.siraaitthaal mottai, vaitthaal kutumi.
3.Veluttu vittalum sari, summaavittaalum sari.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பழமொழிகளின் பொருள் ஒரு கதையில் உள்ளது. அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். அடி வாங்கிய குடியானவன் குயவனிடம் சென்று முறையிட்டு, தன் முறையீட்டின் கடைசி வரியாக முதல் பழமொழியைக் கூறினான்.குடியானவன் சொல்ல நினைத்தது, "அல்லதை அகற்றி நல்லது செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. உன் உசிதம்போல் செய்." இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன.

94. பழமொழி/Pazhamozhi
கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.

பொருள்/Tamil Meaning
தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

Transliteration
Kalutai valaiyarkaaran kittapoyum kettatu, vannaan kittapoyum kettatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இருவருமே கழுதையின் மீது அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம்.

95. பழமொழி/Pazhamozhi
ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.

பொருள்/Tamil Meaning
ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.

Transliteration
Errap pattirku etirp paattillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு (கம்பர் கேட்டது):

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே.

தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.

96. பழமொழி/Pazhamozhi
அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.

பொருள்/Tamil Meaning
அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

Transliteration
Araittu meenthathu ammi, ciraittu meenthathu kutumi.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.

97. பழமொழி/Pazhamozhi
துறவிக்கு வேந்தன் துரும்பு.

பொருள்/Tamil Meaning
துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

Transliteration
Turavikku ventan turumpu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இந்தப் பழமொழியை நிரூபிக்கும் வகையில் பரமஹம்ஸ யோகானந்தாவின் ’ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தில் ஒரு கதை உள்ளது (அத்தியாயம் 41). அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின்போது அந்த மன்னன் தக்ஷசீலத்தில் முகாமிட்டிருந்தான். அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். வர மறுத்தால் துறவியின் தலையைச் சீவிக் கொன்றுவிடும்படி ஆணை அந்த தூதுவனுக்கு. ஆனால் அந்த யோகி தான் படுத்திருந்த நிலையிலிருந்து தன் தலையைக் கூட நிமிர்த்தாமல் அந்த தூதுவனுக்கு ஆன்மீக விளக்கம் அளித்து தான் மரணத்துக்குப் பயப்படவில்லை என்றும், மன்னர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் கூறிவிட, கலவரம் அடந்த தூதுவன் தன் மன்னனிடம் போய் விவரம் கூறினான். ஆச்சரியம் அடைந்த அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார்.) என்ற யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் பாரசீகத்தில் ஸுசா என்ற நகரில் மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன் தன் வயதான உடலை நீத்தார். தனக்கு மிக நெருங்கிய தோழர்களைத் தழுவி விடைபெற்ற அவர், அலெக்ஸாண்டரிடம் அவ்வாறு செய்யாமல், "நான் உன்னை பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன்" என்று மாத்திரமே குறிப்பிட்டார். அலெக்ஸாண்டர் மறு வருடமே பாபிலோனில் மரணம் அடைந்தான்.

98. பழமொழி/Pazhamozhi
ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.

பொருள்/Tamil Meaning
ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.

Transliteration
Oruvanaik konravan utane saavaan, palaperaik konravan pattam aaluvan

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. இருப்பினும், அவனது நிமித்தம் பொதுநலத்தைத் தழுவி இராவிட்டாள் காலம் காலனாக மாறி அவன் கணக்கை இயற்கையாகவோ செயற்கையாகவோ முடிக்கும்.

99. பழமொழி/Pazhamozhi
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

பொருள்/Tamil Meaning
வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.

Transliteration
Ennich ceykiravan cetti, ennamal ceykiravan mtti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

100. பழமொழி/Pazhamozhi
பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.

பொருள்/Tamil Meaning
நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

Transliteration
Pattiyatthukku murunkaikkay vankiva enral, paal telikku avatthikkeerai kontuvaruvan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.

101. பழமொழி/Pazhamozhi
நனைத்து சுமக்கிறதா?

பொருள்/Tamil Meaning
பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

Transliteration
Nanaittu sumakkiratha?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

102. பழமொழி/Pazhamozhi
கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.

பொருள்/Tamil Meaning
கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

Transliteration
Katal varrik karuvatu tinnalam enru utal varrich cetthathaam kokku.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பது’ கொக்கின் இயல்பே. ஆயினும் கடலில் மீன் பிடிக்கும்போது கொக்கு அவ்வாறு இருந்தால் என்ன ஆகும்? இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

103. பழமொழி/Pazhamozhi
ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

பொருள்/Tamil Meaning
தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

Transliteration
akattum pokattum, avaraikkay kaykkattum, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik kooppitapporeno?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.

104. பழமொழி/Pazhamozhi
நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.

பொருள்/Tamil Meaning
எந்த வேலயும் இல்லாமல் ஒரு நாய் அலைவதுபோல, கவைக்குதவாத பொழுதுபோக்கு வேலைகளை வைத்துக்கொண்டு அவன் தான் எப்போதும் ’பிஸி’ என்கிறான்.

Transliteration
Naykku velaiyumillai, nirka neramumillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
"சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும்.

105. பழமொழி/Pazhamozhi
குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?

பொருள்/Tamil Meaning
குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

Transliteration
Kulam utaintu pokumpotu muraiveethamaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

106. பழமொழி/Pazhamozhi
எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?

பொருள்/Tamil Meaning
எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

Transliteration
Ellu enkirathukkumunne, yennai enke enkiran?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், "எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்" என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.

107. பழமொழி/Pazhamozhi
இரிஷி பிண்டம் இராத் தாங்காது.

பொருள்/Tamil Meaning
கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

Transliteration
Irishi pintam iraath thaankathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

108. பழமொழி/Pazhamozhi
புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.

பொருள்/Tamil Meaning
ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

Transliteration
Puttukkootai muntatthil porukkiyetuttha muntam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
புட்டுவெல்லம் என்பது பனைவெல்லம். அதை வைக்கும் ஓலைக்கூடைக்கு புட்டிற்கூடை என்று பெயர்; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது. கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தைவிட பனைவெல்லம் பொதுவாக மட்டமாகக் கருதப்படுகிறது. பனங்கற்கண்டு ஒரு மருந்துப்பொருளாகப் பயன்பட்டாலும், பனைவெல்லத்தைக் கரும்பு வெல்லம் போலவோ, சர்க்கரை போலவோ பயன்படுத்த முடியாது. முன்பெல்லாம் கிராமங்களில் காப்பிக்கு பனைவெல்லத்தைத்தான் பயன்படுத்தினர். கருப்பட்டிக் காப்பி என்றே அதற்குப் பெயர். கரும்பு வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்றொரு பொருள் உண்டு. தலையில்லாத உடம்பை மூன்டம் என்றதால் அறிவிலி ஒருவனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

109. பழமொழி/Pazhamozhi
நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.

பொருள்/Tamil Meaning
நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.

Transliteration
Natakkamaattatha lavaatikku nalupakkamum savari.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.

110. பழமொழி/Pazhamozhi
எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.

பொருள்/Tamil Meaning
எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

Transliteration
Ettuvarusham erumaikkataa erikkup poka vazhi thetumaam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
எருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம். இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.
கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.
காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.
கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

111. பழமொழி/Pazhamozhi
அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?

பொருள்/Tamil Meaning
வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

Transliteration
Arival soottaippola kaayccal marravo?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

112. பழமொழி/Pazhamozhi
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

பொருள்/Tamil Meaning
இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

Transliteration
Pothum enra maname pon ceyyum marunthu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ரஸவாதத்தால் உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சி உலகெங்கும் முயற்சிக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. அதைவிட, இருப்பதே போதும், தேவையானது தேவையான நேரங்களில் வந்துசேரும் என்ற மனம் இருந்தால் அந்த ரஸவாதம் மற்ற உலோக மனங்களையும் பொன்னாக்க வல்லது.

113. பழமொழி/Pazhamozhi
உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.

பொருள்/Tamil Meaning
உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

Transliteration
Unnaip piti ennaip piti, ulakaatthaal talaiyaip piti.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கேட்டது எல்லாம் செய்துகொடுத்தும் மேலும் ஒன்று கேட்பவனை/கேட்பவளைக் குறித்துச் சொன்னது. உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. கண்ணனின் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், தன் குழந்தைகளைக் கொன்ற அசுவத்தாமன் கொல்லப்படும் வரை அவள் தன் கூந்தலை முடிவதில்லை என்று. அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

114. பழமொழி/Pazhamozhi
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.

பொருள்/Tamil Meaning
உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

Transliteration
Unpatu naali utuppatu naanku moolam, enpathukoti ninaintu ennum manam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறியிருந்தாலும், ஆசைகளின் உந்துதலில் மனம் தன் குறைந்த தேவைகளுக்கு மிக அதிகமாகவே நாடுகிறது.

115. பழமொழி/Pazhamozhi
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.

பொருள்/Tamil Meaning
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

Transliteration
nganamum kalviyum naali ariciyile.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
திருமூலரின்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

116. பழமொழி/Pazhamozhi
தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!

பொருள்/Tamil Meaning
வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா!

Transliteration
Thentach chorrukkaaraa, kuntu pottu vaa ataa

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அது என்ன குண்டு, எட்டுமணி? ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். இப்படித்தான் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து காலை விடியும்போது ஒரு முறையும் இரவு எட்டு மணிக்கும் குண்டுச் சத்தம் ஒலிக்கும். இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க.

117. பழமொழி/Pazhamozhi
கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.

பொருள்/Tamil Meaning
படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

Transliteration
Kottik kilanku parikkacchonnaal kopitthukkolvar pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கொட்டிக் கிழங்கு ஒரு செடி எனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்குத் தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.

118. பழமொழி/Pazhamozhi
நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.

பொருள்/Tamil Meaning
நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

Transliteration
Natantal natellam uravu, patuttal payum pakai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சோம்பேறிக்கு நண்பர்கள் கிடையாது; சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள்.

119. பழமொழி/Pazhamozhi
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

பொருள்/Tamil Meaning
குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

Transliteration
Kuntit tinraal kunrum maalum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. கரைவது (குவாரியாகப் பொடிபட்டு) ஊரில் உள்ள குன்றுகளும், இன்னபிற பொதுச் சொத்துக்களும்தாம்.

120. பழமொழி/Pazhamozhi
உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.

பொருள்/Tamil Meaning
என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.

Transliteration
Uttiyokam tataputal, cevikkiravarkal innaariniyaar enrillai, sampalam kanakku valakkillai, kundaaiyai virru nalu varakan anuppas sollu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான். அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. குண்டை என்றால் எருது. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம்.

121. பழமொழி/Pazhamozhi
1.அம்பலம் வேகுது.
2.அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?.
3.சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.

பொருள்/Tamil Meaning
1.இந்தச் சத்திரம் பற்றி எரிகிறது.
2.அதைச் சொல்வது ஏன்? பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?.
3.உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே.

Transliteration
1.Ampalam vekutu.
2.Athaittan solluvanen? Vaayaitthan novanen?.
3.santhai iraiccalile kutiyiruntu kettene.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இந்த மூன்று பழமொழிகளுக்குப்பின் ஒரு கதை உண்டு: சத்திரம் என்பது வழிப்போக்கர்களுக்காகக் கட்டியது. அங்கு யாரும் நிரந்தரமாகத் தங்கக் கூடாது. ஒரு சத்திரத்தில் ஒரு அரைச் சோம்பேறி, ஒரு முக்கால் சோம்பேறி, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள். சத்திரத்தின் சொந்தக்காரன் எவ்வளவு முயன்றும் அவர்களை விரட்ட முடியவில்லை. ஒரு நாள் அவன் சத்திரத்துக்குத் தீ வைத்துவிட்டான். நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. அதற்கு பதிலாக முக்கால் சோம்பேரி இரண்டாவது பழமொழியில் உள்ளவாறு கூறினான். இவர்களின் உரையாடலைக் கேட்ட முழுச் சோம்பேறி கூறியது மூன்றாவது பழமொழி.

122. பழமொழி/Pazhamozhi
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.

பொருள்/Tamil Meaning
பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.

Transliteration
Antai veettuk katanum pittatthuc cirankum aakaathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.

123. பழமொழி/Pazhamozhi
பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு.

பொருள்/Tamil Meaning
ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

Transliteration
Pattupputavai iravalkotutthu, manai thookkikontu alaiya ventiyathaccu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே என்ற கவலைதான்!

124. பழமொழி/Pazhamozhi
முப்பது நாளே போ, பூவராகனே வா.

பொருள்/Tamil Meaning
வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

Transliteration
Muppatu nale po, poovaraakane vaa.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.

125. பழமொழி/Pazhamozhi
பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.

பொருள்/Tamil Meaning
 பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

Transliteration
Pappatthi amma, maadu vantathu, parttukkol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான். வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

126. பழமொழி/Pazhamozhi
கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

பொருள்/Tamil Meaning
அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.

Transliteration
Kootthati kilakke partthan, koolikkaran merke partthan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.

127. பழமொழி/Pazhamozhi
போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.

பொருள்/Tamil Meaning
பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

Transliteration
Ponatupola vanthaanam puthu mappillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.

128. பழமொழி/Pazhamozhi
கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.

பொருள்/Tamil Meaning
தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

Transliteration
Kollaikkaattu nari pallaik kaattinatu pola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.

129. பழமொழி/Pazhamozhi
ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.

பொருள்/Tamil Meaning
ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

Transliteration
Erappatatha maratthile ennayiram kaai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது. 

130. பழமொழி/Pazhamozhi
இலவு காத்த கிளி போல.

பொருள்/Tamil Meaning
பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.

Transliteration
ilavu kaattha kili pola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.

131. பழமொழி/Pazhamozhi
இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.

பொருள்/Tamil Meaning
யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.

Transliteration
Itooval Itooval enru ekkamurru irunthaalaam; naali kotuttu nalu aacaiyum theertthaalaam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
நாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். (நல்வழி 28).’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ, மஞ்சள். (இன்று அவை ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.)

132. பழமொழி/Pazhamozhi
ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.

பொருள்/Tamil Meaning
மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

Transliteration
Aiyaa katirpola, ammal kutheerpola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.

133. பழமொழி/Pazhamozhi
பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.

பொருள்/Tamil Meaning
பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்.

Transliteration
Poonai konra paavam unnote, vellam tinra paavam ennote.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். பிராமணன் சொன்ன பரிகாரம் (தங்கப் பூனை செய்து கங்கையில் விடுவது) செலவுமிக்கதாக இருந்ததால், பதிலாக வணிகன் ஒரு வெல்லப்பூனை செய்து அதற்குக் கிரியைகள் செய்துவிட்டுப் பின் அதைத் தின்றுவிட்டு பிராமணனைப் பார்த்து இவ்வாறு சொன்னானாம்.

134. பழமொழி/Pazhamozhi
சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.

பொருள்/Tamil Meaning
தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.

Transliteration
sanniyaci kovanattukku iccitthuc camusaaram melittathupol.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சந்நியாசி கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. கதை இதுதான்: ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.

135. பழமொழி/Pazhamozhi
பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.

பொருள்/Tamil Meaning
எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.

Transliteration
Panamum patthaayirukkaventum, pennum mutthaayirukkaventum, muraiyileyum atthaimakalaayirukkaventum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 திருமணத்துக்குப் பெண்தேடும் ஒருவன் நினைத்தது இது: நான் கொடுக்கும் சிறிய வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும்.

136. பழமொழி/Pazhamozhi
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

பொருள்/Tamil Meaning
ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.

Transliteration
yerach chonnal erutukkuk kopam, irankach chonnal nontikkuk kopam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.

137. பழமொழி/Pazhamozhi
வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.

பொருள்/Tamil Meaning
வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான்.

Transliteration
Vellaikkaranukku attutthol itangkotutthaarkal, athu aruttu, oor muluthum atitthu, itu enatu enraan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது.

138. பழமொழி/Pazhamozhi
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.

பொருள்/Tamil Meaning
இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

Transliteration
Naalam talaimuraiyaip parttal navithanum cirappanaavaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி.

139. பழமொழி/Pazhamozhi
சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.

பொருள்/Tamil Meaning
நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).

Transliteration
Campanti kirahathan varukiran, sompu tavalai ulle (allatu ankatamaka, veliye) vai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 சொந்தக்காரர்களிடையேயும் திருடர்கள் உண்டு. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. சம்பந்தி கிரஹஸ்தன் என்ற சொற்றொடர் சம்பன்னகிருஹஸ்தன் என்ற சொல்லின் திரிபு. சம்பன்னகிருஹஸ்தன் சொல்லின் நேர்பொருள் தகுதியுள்ள வீட்டுக்காரன் என்று இருந்தாலும் அது அங்கதமாக நாணயமற்றவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

140. பழமொழி/Pazhamozhi
தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.

பொருள்/Tamil Meaning
தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

Transliteration
Tattan thaaypponnilum mappon tirutuvan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர். இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது.

141. பழமொழி/Pazhamozhi
கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.

பொருள்/Tamil Meaning
மரண துக்கத்திலும் அவளுக்குத் திருட்டுப் புத்தி போகாது.

Transliteration
Katti alukirapotu, kaiyum thulaavukirathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள். திருடனுக்கு எதுவுமே புனிதம் இல்லை.

142. பழமொழி/Pazhamozhi
சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது

பொருள்/Tamil Meaning
நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

Transliteration
sappillai perralum, maruttuvacci kooli tappaathu

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. மருத்துவச்சியாவது அவள் வேலை முடிந்தபின்னரே பணம் பெற்றுக்கொண்டாள். ஆனால் டாக்டர்?

143. பழமொழி/Pazhamozhi
பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.

பொருள்/Tamil Meaning
கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

Transliteration
Paatti paittiyakkari, pathakkaipottu mukkuruni yenpal.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.

144. பழமொழி/Pazhamozhi
குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.

பொருள்/Tamil Meaning
ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

Transliteration
Kuruvukkum namam tatavi/pottu, kopala pettiyil kaipottathupola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கோபாலப் பெட்டி என்பது என்ன? விடை நாமம் என்ற பெயரில் உள்ளது. புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.

145. பழமொழி/Pazhamozhi
கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.

பொருள்/Tamil Meaning
மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

Transliteration
kumpitta kovil talaimel itintu viluntatupola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பல பழமொழிகள் அனுபவத்தில் எழுந்தாலும், இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் சொன்னதாகத் தோன்றுகிறது. அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக, ’நீ பெரிய ஆளப்பா’ என்று சொல்லும்போது நாம் அவன் உடல் பருமையோ உயரத்தையோ குறிப்பதில்லை.

146. பழமொழி/Pazhamozhi
எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.

பொருள்/Tamil Meaning
கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

Transliteration
yenpatu ventam, aimpatum muppatum kodu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியது ’சாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!

147. பழமொழி/Pazhamozhi
இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.

பொருள்/Tamil Meaning
அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.

Transliteration
Iruntum kaedutthan, cetthum ketuttan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது. 

148. பழமொழி/Pazhamozhi
இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.

பொருள்/Tamil Meaning
கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

Transliteration
Irantu kaiyum pothathu enru akappaiyum kattikkontaan.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஏன் கைகள் போதவில்லை? வாங்கியது என்ன? கையூட்டு (லஞ்சம்).

149. பழமொழி/Pazhamozhi
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.

பொருள்/Tamil Meaning
நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று.

Transliteration
Ampattan mappillaikku meecai othukkinathu pola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். வந்த இடத்தில் நாவிதனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறைசொல்லித் திருத்தியதால் மாப்பிள்ளையின் மீசை மறைந்தே போயிற்றாம்!

150. பழமொழி/Pazhamozhi
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.

பொருள்/Tamil Meaning
ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.

Transliteration
elaiyaik kantaal moazaium payum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.

151. பழமொழி/Pazhamozhi
சேணியனுக்கு ஏன் குரங்கு?

பொருள்/Tamil Meaning
நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?

Transliteration
saeniyanukku yen kuranku?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது.

152. பழமொழி/Pazhamozhi
 சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.

பொருள்/Tamil Meaning
சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல. 

Transliteration
sanappan veettukkoli thane vilanku poottikkontathupola.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணப்பன் வீட்டுக்கோழி என்றது தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.

153. பழமொழி/Pazhamozhi
நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?

பொருள்/Tamil Meaning
நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?

Transliteration
Nellu kutthukinravalukkuk kallu parishai teriyuma?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து.

154. பழமொழி/Pazhamozhi
ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?

பொருள்/Tamil Meaning
காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?

Transliteration
srirankattuk kaakkaayaanalum kovintam paatumaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது. அதுபோலச் சிலர் இருக்கிறார்கள்.

155. பழமொழி/Pazhamozhi
மௌனம் கலகநாசம்.

பொருள்/Tamil Meaning
மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.

Transliteration
Maunam kalakanaasam.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.

156. பழமொழி/Pazhamozhi
மாரைத்தட்டி மனதிலே வை

பொருள்/Tamil Meaning
கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.

Transliteration
Maaraitthatti manatile vai

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம்.

157. பழமொழி/Pazhamozhi
மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.

பொருள்/Tamil Meaning
துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.

Transliteration
Mathupinthu kalakampol irukkiratu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.

158. பழமொழி/Pazhamozhi
குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.

பொருள்/Tamil Meaning
வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.

Transliteration
Kuravalakkum itaivalakkum konchattil theerathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.

159. பழமொழி/Pazhamozhi
அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.

பொருள்/Tamil Meaning
கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.

Transliteration
Angkittuthotuppikku anku irantu kuttu, inku irantu chottu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! (என் விளக்கம்).சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.

160. பழமொழி/Pazhamozhi
மரத்தாலி கட்டி அடிக்கிறது.

பொருள்/Tamil Meaning
மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.

Transliteration
Maratthali katti atikkiratu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

161. பழமொழி/Pazhamozhi
கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.

பொருள்/Tamil Meaning
எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.

Transliteration
Kannaal kantatai ellukkaay pilanthathupolach sollaventum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.

162. பழமொழி/Pazhamozhi
குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.

பொருள்/Tamil Meaning
குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.

Transliteration
Kulantaik kayccalum, kuntan/kullan kayccalum pollatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.

163. பழமொழி/Pazhamozhi
கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?

பொருள்/Tamil Meaning
 திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?

Transliteration
Kollai atittut thinravanukkuk kontuthinnath thaanguma?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.

164. பழமொழி/Pazhamozhi
பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.

பொருள்/Tamil Meaning
(சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.

Transliteration
Palaiya ponnanae ponnan, palaiya kapparaiye kapparai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்துவைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதைக்கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத்தொடர்ந்து சென்று புதையலைக்கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான்.

165. பழமொழி/Pazhamozhi
குரங்குப்புண் ஆறாது.

பொருள்/Tamil Meaning
குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?

Transliteration
kuranguppun aaraatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.

166. பழமொழி/Pazhamozhi
சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.

பொருள்/Tamil Meaning
தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.

Transliteration
suyakaariya thurantharan, cuvami kaariyum valavala.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 दुरन्त என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைக்கு ’தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது’ என்றொரு பொருளுண்டு. வழவழவெனல் என்ற தமிழ்ச்சொல்லுக்குத் தெளிவின்றிப் பேசுதல் என்று பொருள். தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.

167. பழமொழி/Pazhamozhi
கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.

பொருள்/Tamil Meaning
இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.

Transliteration
Kanchi varatappa enral enke varatappa enkiran.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?

168. பழமொழி/Pazhamozhi
ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

பொருள்/Tamil Meaning
தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.

Transliteration
ooraarvittu neyye, en pentatti kaiye.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?

169. பழமொழி/Pazhamozhi
வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.

பொருள்/Tamil Meaning
எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.

Transliteration
Veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
 மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.

170. பழமொழி/Pazhamozhi
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?

பொருள்/Tamil Meaning
குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

Transliteration
Kuranku kallum kutittu, peyum pitittu, telum kottinal, enna kadhi akum?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?

171. பழமொழி/Pazhamozhi
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.

பொருள்/Tamil Meaning
ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.

Transliteration
Ancum moonrum untanal ariyappennum camaikkum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.

172. பழமொழி/Pazhamozhi
கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.

பொருள்/Tamil Meaning
ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

Transliteration
Kantaal kamacci nayakar, kanavittal kaamaatti nayakar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது.

173. பழமொழி/Pazhamozhi
இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.

பொருள்/Tamil Meaning
இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.

Transliteration
Ithu en kulaachaaram, itu en vayirraachaaram.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.

174. பழமொழி/Pazhamozhi
உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.

பொருள்/Tamil Meaning
ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.

Transliteration
Uruttappuratta ullatum ullukku vankum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்’ என்கிறோம்.உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.

175. பழமொழி/Pazhamozhi
தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.

பொருள்/Tamil Meaning
கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

Transliteration
Thoorttha kinarrait thoorvaaraadhae.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.

176. பழமொழி/Pazhamozhi
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.

பொருள்/Tamil Meaning
மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

Transliteration
Mamiyar tuni avilndhal vaayalum sollakkootaathu, kaiyalum kaattakkootathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?

177. பழமொழி/Pazhamozhi
சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!

பொருள்/Tamil Meaning
எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?

Transliteration
Ceeththiratthuk kokke, ratthinattaik kakku!

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.

178. பழமொழி/Pazhamozhi
இழவு சொன்னவன் பேரிலேயா பழி?

பொருள்/Tamil Meaning
மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

Transliteration
Ilavu connavan perileye pazi?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.

179. பழமொழி/Pazhamozhi
அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?

பொருள்/Tamil Meaning
அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?

Transliteration
Ammi mitukko, araippaval mitukko?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!

180. பழமொழி/Pazhamozhi
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.

பொருள்/Tamil Meaning
இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.

Transliteration
Imaikkurram kannukkuttheriyaathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.தன் முதுகு தனக்குத் தெரியாது.

181. பழமொழி/Pazhamozhi
அற்றது பற்றெனில் உற்றது வீடு.

பொருள்/Tamil Meaning
உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.

Transliteration
Arratu parrenil urratu veetu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.)

182. பழமொழி/Pazhamozhi
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.

பொருள்/Tamil Meaning
சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

Transliteration
Castiram poy enral kiraganathai paar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது.

183. பழமொழி/Pazhamozhi
குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.

பொருள்/Tamil Meaning
கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.

Transliteration
Kuppaiyum koliyum pola kuruvum ceeshanum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டது, குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பைபோன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது பழமொழியின் தாத்பரியம்.

184. பழமொழி/Pazhamozhi
காரண குரு, காரிய குரு.

பொருள்/Tamil Meaning
காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.

Transliteration
Karana guru, kaariya guru.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
’குரு கீதா’ குறிப்பிடும் மற்ற குரு வகைகள் இவை: ’சூசக குரு’வானவர் உலகசாத்திரங்களை நன்கு கற்றறிந்தவர். ’வாசக குரு’வானவர் வர்ணாசிரம தர்மங்களை எடுத்துச்சொபவர். ’போதக குரு’வானவர் சீடனுக்கு ஐந்தெழுத்து போன்ற மந்திரங்கள்மூலம் தீட்சையளிப்பவர். ’நிஷித்த குரு’வானவர் மோகனம், மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர். ’விஹித குரு’வானவர் வைராக்யம் கைவரப்பெற்று சம்சாரபந்தத்திலிருந்து விடுதலை பெற வழிகாட்டுபவர். ’காரணாக்ய குரு’வானவர் ’தத்துவமசி’--ஆத்மனும் பிரமனும் ஒன்றே என்னும் மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து அனுபவித்துப் பயில்வதன் மூலம் மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர். கடைசியாகப் ’பரம குரு’வானவர் சீடனின் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி, ஜனன-மரண பயத்தைப் போக்கி, பிரமனோடு ஐக்கியமாக வழிகாட்டுபவர்.

185. பழமொழி/Pazhamozhi
சீதை பிறக்க இலங்கை அழிய.

பொருள்/Tamil Meaning
சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.

Transliteration
Ceethai pirakka ilankai aliya.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது.

186. பழமொழி/Pazhamozhi
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

பொருள்/Tamil Meaning
ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.

Transliteration
Tanvinai tannaiccutum, ottappam veettaiccutum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான் இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.

187. பழமொழி/Pazhamozhi
இல்லது வாராது, உள்ளது போகாது.

பொருள்/Tamil Meaning
நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

Transliteration
Illatu vaaraatu, ullatu pokatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.

188. பழமொழி/Pazhamozhi
தெய்வம் காட்டும், ஊட்டுமா?

பொருள்/Tamil Meaning
தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

Transliteration
Teyvam kaattum, uuttumaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:

189. பழமொழி/Pazhamozhi
சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

பொருள்/Tamil Meaning
கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

Transliteration
Cuvami illaiyenral saaniyai paar; maruntillai enral panattaip paar; peti illai enral (ner) vanattaip paar.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

190. பழமொழி/Pazhamozhi
குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!

பொருள்/Tamil Meaning
குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

Transliteration
kutirai kunam arintu allavo tampiran kompu kotukkavillai!

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

191. பழமொழி/Pazhamozhi
கிழவியும் காதம், குதிரையும் காதம்.

பொருள்/Tamil Meaning
கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

Transliteration
Kilaviyum kaatham, kutiraiyum kaatham.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

 
Top